வடக்கன்குளம் பரிசுத்த திருக்குடும்ப திருத்தல ஆலய மணியின் வரலாறு ;
ஆண்டவன் உறையும் ஆலயம் அழகு ஆலயம் உறையும் ஆண்டவன் அழகு ஆண்டவன் அழைக்கும் ஆலயமணி அழகு ஆலயமணி ஒலிக்கும் அழகே அழகு
ஆம் ஆண்டவன் உறையும் ஆலயத்திற்குக் கம்பீரமும் அருளும், அழகும் தருவது ஆலய கோபுரத்தில் அமைந்திருக்கும் ஆலயமணி. அது வெறும் ஒலி அல்ல. ஆண்டவனின் குரல் ஆலயமணி ஓசை கேட்டு ஆண்டவனின் இல்லம் வாருங்கள் என்று அழகாய்ப் பாடுகிறான் ஒரு கவிஞன். நமது பரிசுத்த திருக்குடும்ப ஆலய முகப்பு கோபுரங்களில் அமைந்துள்ள ஆலய மணியின் ஒலி ஏறக்குறைய சுற்றுவட்டாரம் மூன்று கிலோமீட்டர் வரை கேட்கின்றது. வெண்கலத்தால் செய்யப்பட்டு வடக்கு கோபுரமணி 66 செ.மீ விட்டம் உடையதாகவும், தெற்கு கோபுரமணி 52 செ.மீ விட்டம் உடையதாகவும் உள்ளன. வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், காடு, கழனிகளில் வேலை செய்வோருக்கும் இதுதான் நேரத்தைக் கூறும் கடிகாரம். ஆலய வழிபாடுகளில் பங்கேற்க வாருங்கள் என்று நம்மை அழைப்பதும், மங்கல நிகழ்வுகளில் மகிழ்ச்சியாக ஒலிப்பதும், அமங்கல நிகழ்வுகளை வருத்தமாக அறிவிப்பதும் இந்த ஆலய மணிகளின் ஒலிதான். இரட்டை மணிகள் சேர்ந்து ஒலித்தால் திருவிழா காலங்கள், கோபுரத்தில் ஏறி மணிகளின் நாக்கினைப் பிடித்து வேகமாக அடித்தால் ஊரில் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது ஓடி வாருங்கள். கூடி வாருங்கள் என நம்மை உஷார்படுத்துவதும் இந்த மணிகள்தான். இவ்வாறு நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இந்த ஆலய மணிகளுக்கு முக்கியமான இடமுண்டு.
நமது ஆலய மணிகள்
கி.பி. 1861ல் நமது ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்த சங் ஜோசப் கிரகோரி சுவாமிகள் காலத்தில் ஆலயக் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தன. அந்தக் காலக்கட்டத்தில் பிரான்சு நாட்டில் நமது ஆலயத்திற்கான இருமணிகளும் லியான் நகரில் பர்டின் என்பவரால் 1861ல் செய்யப்பட்டன. இவைகளை காசிமர் கிரகி என்ற பிரெஞ்சுக்காரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். மணிகள் மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, *கடல் மார்க்கமாய் சென்னை துறைமுகம் வந்திறங்கி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சி அலுவலகம் வந்து சேர்ந்தன. இதற்குள் ஆண்டுகள் பல கழிந்துவிட்டன. பங்குத்தந்தை மாற்றலாகி சென்று விட்டார். உரிமை கோரப்படாத (unclaimed cargo) அந்தப் பெட்டியின் மேல் பிரெஞ்சு எழுத்துக்கள் இருந்தமையால், விபரம் புரியவில்லை. பெட்டியின் உள்ளே இருப்பவை மணிகள் என்பதால் ஆட்சியர் அதனை நெல்லையப்பர் கோவிலுக்கு அனுப்பி வைக்க மணிகளின் எடை அதிகமாக இருந்ததால் பயன்படுத்த இயலாமல் அவர்களும் அதனை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டனர்.
அப்போது அங்கே சுற்றுலாப் பயணமாக வந்த சில பிரெஞ்சுக்காரர்கள் ஓரமாய் இருந்த அந்தப் பெரிய பெட்டியின்மேல் பிரெஞ்சு எழுத்துக்களைப் பார்த்து கோவில் நிர்வாகத்தின் அனுமதியுடன். பெட்டியை பிரித்துப்பார்த்தனர். மணிகளின் மேல் சிலுவை அடையாளமும், குழந்தை இயேசுவைத் தாங்கிய தேவமாதாவின் படமும் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர் மற்ற விவரங்களையும் தெரிந்து கொண்டனர். எனவே இந்த மணிகள் ஒரு கத்தோலிக்க ஆலயத்தைப் போய்ச் சேர வேண்டுமென தீர்மானித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். அந்த வேளையில் தூத்துக்குடி கடற்கரை ஆலயங்களில் பிரசித்தி பெற்றதாய் இருந்தது நம் வடவை நகரின் பரிசுத்த திருக்குடும்ப ஆலயமே. எனவே அந்தப் பெட்டியிலுள்ள ஆலய மணிகள் நமது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆலய அர்ச்சிப்பு 1872ல் நிகழ்ந்தது. சங் பௌகட் அடிகளார் பங்கு குருவாயிருந்தார். அந்த நாட்களில் ஆலயப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு உழைத்துக் கொண்டிருந்த கட்டளை வியாகுலமுத்து என்பவரை ஆலய மணியை முதன்முதலாக அடிக்க வைத்து அவரைக் கௌரவப்படுத்தினார் பங்குத் தந்தையவர்கள், அந்தப் பணியையும், கோவில் சார்ந்த இதரப் பணிகளையும் அதே கட்டளைக் குடும்பத்தினர் ஐந்து தலைமுறையாக தன்னார்வத்தோடும். முழு ஈடுபாட்டுடனும் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.
ஆலய மணியின் ஒலி கேட்டு ஆண்டவன் சந்நிதி அடைந்து, அவரது அருள்பெற்று ஆனந்தம் அடைவோம்.