வடக்கன்குளத்தில் திருமுழுக்கு பெற்ற புனித தேவசகாயம் வரலாறு :
புனித தேவசகாயம் நட்டாலம் என்ற கிராமத்தில் உள்ள இந்துக் குடும்பத்தில் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் பிறந்தார். நீலகண்டன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் “லாசரசு” என்பதன் தமிழ் பெயரான தேவசகாயம் என்ற பெயரில் வடக்கன்குளத்தில் ஞானஸ்தானம் பெற்றார். இவர் சிறு வயதிலேயே சமஸ்கிருதம், கலை ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். வில் வித்தை, வர்மக் கலைகள் மற்றும் போரிற்கான ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகளையும் கற்று அறிந்தவர். அதன் பின்னர் இவர் மன்னர் மார்த்தாண்டவர்மாவின் அரண்மனையில் கருவூல அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.
கிறிஸ்தவ மனமாற்றம் :
அரண்மனையில் இவர் பணிபுரிந்த காலத்தில் டச்சுப்படைத் தலைவரான டிலனாய் அவர்களுடன் பழகும் பாக்கியம் பெற்றார். ஒருநாள் நீலகண்டன் மிகவும் கவலையாக இருப்பதைக் கண்ட டிலனாய், அதற்கான காரணம் அவரிடம் கேட்டார். அதற்கு நீலகண்டன் தமது குடும்பத்திற்குச் சொந்தமான கால்நடைகள் இறந்து போவதாலும், பயிர்கள் நாசமாகி வருவதாலும் பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார். அப்போது டிலனாய் திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் வாழ்க்கையைப் பகிர்ந்து கிறிஸ்தவ மதத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். யோபுவின் வரலாற்றைக் கேட்ட நீலகண்டன் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவராக விரும்பினார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில் பணிபுரிந்த பாதிரியார் ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி என்பவரிடம் 1745 ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாளன்று திருமுழுக்கு பெற்று தேவசகாயம் என்னும் பெயரைப் பெற்றார். அவரது மனைவி பார்கவி அம்மாளும் அங்கு திருமுழுக்கு பெற்று ஞானப் பூ என்னும் திருப்பெயர் பெற்றார். ஞானப்பூ அம்மாள் அவரது கணவரின் விருப்பப்படி வடக்கன்குளத்திலே வாழ்ந்து மரித்து அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை வடக்கன்குளத்தில் உள்ளது.
மறைசாட்சியாய் மரணம் :
நாயர்குலத்தைச் சேர்ந்த தேவசகாயம் ஏற்கனவே கிறிஸ்தவத்தைப் பின்பற்றி வந்த தாழ்ந்த சமுதாய மக்களோடு உறவாடி வந்தார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவத்தைப் பின்பற்றக் கூடாது என்ற திருவிதாங்கூர் மன்னரின் ஆணையைச் சுட்டிக்காட்டி, அவரை இந்து மதத்தை ஏற்க வலியுறுத்தினர். தமது மனத்தை மாற்றிக் கொள்ளுமாறு மன்னர் விடுத்த அழைப்பை தேவசகாயம் முழு மனதோடு நிராகரித்தார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு சித்திரவதைகள் பண்ணினர். அப்போதும் தமது கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இந்தக் கீழ்ப்படியாமையை அரச துரோகமாக எண்ணி அரசர், அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரைக் கொல்லும் முன் மற்றவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்படி, கரும்புள்ளி, செம்புள்ளிக் குத்தி, கழுத்தில் எருக்கம் மாலையை அணிவித்து, எருமை மாடு மீது அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். தேவசகாயம் சென்ற இடங்களில் எல்லாம் அவர் ஆசி பெற்றவர்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்தன. அவரைக் கட்டி வைத்த பட்டுப்போன வேப்பமரம் ஒன்று துளிர்த்து வளர்ந்தது. இதனால் இவரின் புகழ் ஊரெங்கும் பரவியது. இதனை அறிந்த அரசர் அவரை இரகசியமாகக் கொலை செய்து விடுமாறு கட்டளையிட்டார். மக்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருந்த போது, 1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். காட்டு விலங்குகள் தின்று எஞ்சியிருந்த அவரின் உடல் பாகங்களை, அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் எடுத்துச் சென்று நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர். அப்பொழுது கொச்சி மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த கிளெமென்சு யோசப் “நமக்கு ஒரு மறைசாட்சி கிடைத்துவிட்டார்” என்று கூறி. சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்.
அற்புதரான மறைசாட்சி :
தேவசகாயத்தின் கல்லறையில் ஜெபித்தால் பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்ததாக மக்கள் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். இதன் பிறகு, தேவசகாயம், கிறிஸ்துவின் மேல் கொண்ட நம்பிக்கையின் பொருட்டே கொல்லப்பட்டார் என்னும் செய்தி அடங்கிய அறிக்கையை அப்போதைய கொச்சி ஆயர் கிளெமென்சு யோசப் 1756 இல் ரோமில் உள்ள திருத்தந்தைக்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது மறைசாட்சி கட்டுண்டிருந்த சங்கிலியும் ரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுவே அவரைப் புனிதராக உயர்த்துவதற்கான முதல் முயற்சியாகும்.
அருளாளர் ஆன மறைசாட்சி :
கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்குப் பிறகு. 1993 ஆம் ஆண்டில் தேவசகாயத்திற்குப் புனிதர் பட்டமளிக்க முயற்சி மேற்கொண்டார் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் லியோன் தர்மராஜ், அவரின் விண்ணப்பத்திற்கு இணங்கி, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை, அகில இந்திய ஆயர் பேரவையுடன் இணைந்து தேவசகாயத்திற்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேவசகாயம் உறுதியான விசுவாச வாழ்வு வாழ்ந்தார் என அறிக்கையிடும் புனிதர் பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பேராயத்தின் ஆவணத்தில் கையெழுத்திட்டு ‘வணக்கத்திற்குரியவர்’ நிலைக்கு உயர்த்தினார். இவரின் மறைசாட்சிய வாழ்வின் அடிப்படையில் அவருக்கு ‘அருளாளர்’ பட்டம் வழங்கவும் ஒப்புதல் அளித்தார். நாகர்கோவில் கார்மேல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தேவசகாயத்தை அருளாளராக உயர்த்தும் அறிவிப்பை ரோமிலிருந்து வந்த கர்தினால் ஆஞ்சல்லோ அமாத்தோ வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின் போது தேவசகாயம் ‘மறைசாட்சி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது ‘முக்திபேறு பெற்றவர்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்தும்,இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் பல கத்தோலிக்க சமயத் தலைவர்களும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களும் கலந்து கொண்டனர்.
புனிதரான மறைசாட்சி :
திருத்தந்தை பிரான்சிஸ், அருளாளர் தேவசகாயத்தைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் தெரிவித்து அதிகாரப்பூர்வமான ஆவணத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள் கையெழுத்திட்டார். தேவசகாயத்திற்கு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் இருந்தும், அதிலும் குறிப்பாக நமது பங்கில் இருந்தும் ஏராளமானோர் இப்புனித நிகழ்வில் பங்குபெறும் பாக்கியம் பெற்றனர். இந்தப் புனிதர் பட்ட நிகழ்வில், நமது தமிழ்த்தாய் வாழ்த்தும் கம்பீரமாக முழங்கப்பட்டது.
புனிதர் பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நமது புனிதர் தேவசகாயத்தின் வரலாறு பலரையும் சிலிர்க்க வைக்கும் விதமாகவே உள்ளது. அதுவும் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை. தேவசகாயம் பிரசங்கம் செய்யும் போது, ஜாதி வேறுபாடுகள் இருந்த போதிலும், அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார். கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரியார் டெர்குலினியன் “உயிர் தியாகத்தை மனமுவந்து, புரியும் தியாகிகளின் இரத்தமே அம்மதத்தின் விதையாகும்” என்று சொல்வதற்கிணங்க நம் மறைசாட்சி ஒரு தியாகியாக, விதையாக நம்மில் ஊன்றப்பட்டிருக்கிறார். நம் மண்ணின் மைந்தன் புனிதர் ஆனார் என்று நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் தருணம் இது. நாமும் நமது புனித தேவசகாயத்தைப் போல் வீர விசுவாசம் உள்ளவர்களாய் வாழ உறுதி கொள்வோம்.
குறிப்பு : புனித தேவசகாயம் அவர்கள் உபயோகித்த திருப்பண்டங்கள் தலைச்சீரா, இலைச்சுவடிகள் வடக்கன்குளம் ஆலயத்தில் உள்ளது.