தனிநாயகம் அடிகளார்

தனிநாயகம் அடிகளார்

தனிநாயகம் அடிகளார் உலகப் புகழ்பெற்ற தமிழ்ப் பேரறிஞர் வடக்கன்குளத்தில் அவர்கள் பணி வரலாறு :


“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே என்பதற்கேற்ப தமிழின் சிறப்புகளையும். தொன்மையையும் தரணிக்குக் கொண்டு சென்றவர் தந்தை தனிநாயகம் அடிகள். இலங்கை நாட்டு யாழ்ப்பாண நெடுந்தீவைச் சார்ந்த ஹென்ரி ஸ்தனிஸ்லாஸ் கணபதிப் பிள்ளை. செசில் இராசம்மா வஸ்தியாம் பிள்ளை தம்பதியருக்கு மகனாக சேவியர் தனிநாயகம் 02.08.1913ல் பிறந்தார்.
1922-1930 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும், 1931-1934ல் கொழும்பு நகரிலுள்ள புனித பெர்நார்து குருத்துவக்கல்லூரியிலும் மெய்யியல் பயின்றார்.
1934ல் இந்தியாவின் கேரள பேராயராக இருந்தவர் மார் இவானியோஸ். இவர் இலங்கை சென்ற போது, தந்தை தனிநாயகம் அடிகள், பேராயருடன் தொடர்பு கொண்டு அவருடன் கேரளா சென்றார். ஆயர் அவரை, உரோமை மாநகரின் உர்பன் பல்கலைக்கழகத்திற்குச் சமயவியல் கல்வி பெற அனுப்பினார்.
1938 மார்ச் 18ல் அடிகளார், உரோமையில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1939ல் உரோமையில் முனைவர் பட்டமும் பெற்று கேரளா திரும்பினார்.
1941-1945 வரை வடக்கன்குளம் புனித தெரசாள் உயர்நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியராகப் பணியாற்றினார். அப்போது ரோச் ஆண்டகைக்கும், பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த ஜே.எஸ். லோபா அடிகளாருக்கும் இருந்த தமிழ் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு, தந்தை தனிநாயகம் அடிகளார் வடக்கன்குளம் பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் பயின்றார். பள்ளியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமயப்பாடங்களை, மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
தமிழ் மொழியின் இலக்கியங்களை அறிந்த அடிகளார், 1945ல் ரோச் ஆண்டகை அனுமதியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றார். 1949ல் இலக்கியத்தில் முதுகலையும் 1952ல் ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்று தமிழில் புலமை பெற்றவராய்த் திகழ்ந்தார்.
தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியன், பிரெஞ்சு ஜெர்மன், போர்த்துக்கீசியம், ஸ்பானிஷ, ரஷ்யன் என 9 மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவை தவிர மேலும் 15 மொழிகள் நன்கு அறிந்து இருந்தார். உலக நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் உரையாற்றி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றை உலக அரங்கில் ஒலிக்கச் செய்து தமிழ்த் தூதுவராய்த் திகழ்ந்தார்.
07.01.1964ல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கி, ஆய்வு நூல்கள் வெளியிட்டார். பொதுச் செயலாளராக இருந்து, மன்றத்தின் சார்பில் Journal of Tamil Studies என்னும் இதழையும் வெளியிட்டார். எனவே இவர் “ஆராய்ச்சியின் தந்தை” என்று மொழியியல் அறிஞரான கபில் சுவலபில் அவர்களால் பாராட்டப்பட்டார்.
தமிழின் செழுமையை உலகினர் அறிய, தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதற்காக Tamil Culture என்னும் ஆங்கில முத்திங்கள் இதழையும் வெளியிட்டார். இந்த இதழ் உலக அறிஞர்களை ஈர்த்தது. அமெரிக்காவில் வாஷிங்டனிலுள்ள பாராளுமன்ற நூலகம் இதழை அனுப்பக் கேட்டுக்கொண்டது. மேலும் உரோமையிலுள்ள பண்பாட்டுப் பரப்பு மையமும், நியூயார்க் நூலகமும் அடிகளாருடன் தொடர்பு கொண்டு இதழ் வேண்டி விண்ணப்பித்தனர். அடிகளார் உலகில் 51 நாடுகளுக்குத் தமிழ்த் தூதராகச் சென்றுள்ளார். இதனால் உலகத் தமிழ் ஆராய்சி மன்றமும் உலகத் தமிழ் மாநாடும். உலகத் தமிழ் நிறுவனம் என்ற அமைப்பும் தோற்றுவிக்க முடிந்தது.
1966ல் முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவிலுள்ள கோலாலம்பூரிலும், 1968ல் இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு சென்னையிலும், 1970ல் முன்றாம் உலகத் தமிழ் மாநாடு இலங்கையிலுமாக 4 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமை இவரைச் சாரும்.
கி.பி. 16ம் நூற்றாண்டில் சமயப் பணியாற்ற வந்த மேனாட்டுக் கிறிஸ்தவ அறிஞர்கள் இயற்றிய தமிழ் இலக்கணம், உரைநடை, அகராதி போன்ற நூல்களை அமெரிக்கா, ஐரோப்பா நாட்டின் நூலகங்களிலிருந்து தேடித் தந்து தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
6.11.1550ல் ஐரோப்பிய தமிழ் அறிஞர் எழுதிய ‘தமிழ் மொழி இலக்கணம்’ எனும் கையெழுத்துப் பிரதியை லிஸ்பன் தேசிய நூலகத்தில் கண்டுபிடித்து அதை தமிழில் அச்சிட்டு வெளியிட்டார். 1586ல் எழுதப்பட்ட ‘கிறிஸ்தவ போதனை’ எனும் நூலை அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து பெற்று வந்து வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படும் பாடல் திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையில் இருந்து எடுக்கப்பட்டதைக் கண்டறிந்து வெளியிட்டவர் அடிகள் என, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அடிகள் கூறியுள்ளார்.
1625-1666ல் அந்தாம் தெ ப்ரேயென்சா எனும் இயேசு சபைத் துறவி எழுதிய தமிழ் போர்த்துக்கீசிய (Antam De Proenca) அகராதியின் கையெழுத்துப் படியைப் பாரீசிலுள்ள தேசிய நூலகத்தில் கண்டுபிடித்தார். இவ்வாறு எண்ணற்ற அரிய படைப்புகளைத் திரைகடல் தாண்டி தேடிக்கொண்டு சேர்த்த பெருமை அடிகளையேச் சாரும். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பரந்து விரிந்த ஆளுமை தன்மையுடைய பேரறிஞராகிய தந்தை தனிநாயகம் அடிகளாரின் பெருமையை, மொழிப்பற்றை மாணவர்களுக்கு உணர்ந்திட தமிழக அரசு இவர் ஆய்வுக் கட்டுரையைப் பாடநூலில் வெளியிட்டுப் பெருமைப்படுத்துகிறது.
அடிகளார், ஆசிரியராகப் பணியாற்றிய வடவை புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளியில் அவரது நூற்றாண்டு விழா 2013ம் ஆண்டு பங்குத்தந்தையாக இருந்த பேரருட்திரு பி. நெல்சன் பால்ராஜ் அடிகள் தலைமையில் இலக்கிய விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அடிகளாரின் திருவுருவச் சிலை பள்ளியில் நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆண்டுதோறும் அவர் பிறந்த தினமான ஆகஸ்ட் இரண்டாம் நாள், வடவையின் தமிழ் மன்றமும், புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளியின் இலக்கிய மன்றமும் இணைந்து பள்ளி தாளாளர் பேரருட்திரு ஜாண் பிரிட்டோ தலைமையில் சிறப்பித்து வருகிறது.
இவ்வளவு பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய தந்தை தனிநாயகம் அடிகள் நம் பள்ளியின் முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் என்பது நமக்குப் பெருமையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *