1944ம் ஆண்டு இறை ஊழியர் சூசைநாதர் அடிகளார் செபமாலை தாசர் சபையின் முதல் இந்திய மடத்தை வடக்கன்குளத்தில் நிறுவினார்.
இறைஊழியர் சூசைநாதர் வரலாறு (1882-1968)
தூத்துக்குடியில் திரு. பிரான்சிஸ் பெர்னாண்டோ திருமதி. மத்தியாஸ் அம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக, தந்தை அந்தோணி சூசைநாதர் 1882-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் நாள் பிறந்தார். அருள்தந்தையின் தந்தை பிரான்சிஸ் திரு இருதயங்களின் பேராலயத்தில் சக்கரிஸ்தராகப் பணியாற்றினார். தந்தை அவருக்கு ஆன்மீக ஆர்வத்தை ஊட்டினார்.
செபவாழ்வு, தாழ்ச்சி, சேவை போன்ற உயர்ந்த பண்புகளைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். குருத்துவ அர்ப்பண வாழ்வு வாழ விரும்பினார். 1910 டிசம்பர் 17-ல் திருச்சி ஆயர் அகஸ்டின் பெசாந்தியே அவர்களால் அருள்பொழிவு செய்யப்பட்டார். கிறிஸ்துவர்களின் பாதுகாவலனாக ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக ஆக்கபூர்வமாகச் செயல்பட்டார். 1912-ல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.
வடவையில் இறைஊழியர் சூசைநாதர்
தந்தை அவர்கள் இடைவிடா ஜெபத்திலும், அர்ப்பண வாழ்விலும் ஈடுபாடு கொண்டதால் இறைமக்கள் அவரிடம் வந்தனர். குருவாக 29 ஆண்டுகள் பணியாற்றினார்.
1943-ம் ஆண்டு காலஞ்சென்ற ரோச் ஆண்டகை அவர்கள் இலங்கையில் செபமாலை தாசர் சபையைப் பார்வையிட்டார். இத்தகைய சபையைத் தமது மறைமாவட்டத்திலும் நிறுவ விரும்பினார்.
செபமாலைத் தாசர் துறவற சபை 1943 பணகுடியில் ஆரம்பிக்கப்பட்டது. பாத்திமாகிரி என்ற பெயரில் செபமாலை தாசர் சபையின் முதல் மடத்தை 1944-ல் தந்தை சூசைநாதர் வடவையில் ஆரம்பித்தார். சிறந்த ஆன்மீகத் தந்தையாக, எளிமை, தாழ்ச்சி உடையவராக வாழ்ந்து வந்தார்.
நற்கருணை நாதர் முன் பலமணி நேரம் ஜெபித்து வந்தார். ஜெபமாலை தாசர் மடம் ஒரு தியான இல்லமாகவும், குருக்களுக்கும், பொதுநிலையினருக்கும் உள்தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாகவும் விளங்கியது. அதனால் தியானம் செய்வோரை மீண்டும் வரத் தூண்டியது. 1954-ல் பெண்களுக்காக அமலிவனத்தில் ஒரு மடம் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது.
தந்தை சூசைநாதர், எளியவர்கள் சிறுதொழில்கள் செய்து பசி ஆற்ற வழிவகுத்தார். பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமையிலும், ஊர் மக்களுக்குச் சனிக்கிழமையிலும் ஒப்புரவு வழங்கினார். உழைத்து உண்ண வேண்டுமென இயற்கை வழி பயிரிட்டு தானும், மற்றவர்களும் பசியாறினார். தன்னையே வெறுமையாக்கிக் கடவுளுக்காக வாழ்ந்த தந்தை சூசைநாதர் 1968-ம் ஆண்டு ஜூன் 8-ல் இறைவனடி சேர்ந்தார்.
2011-ம் ஆண்டு திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்களால், அருட்தந்தை சூசைநாதர் இறைஊழியராக உயர்த்தப்பட்டார். இன்றும் இவரது கல்லறையில் ஜெபிப்பவர்கள் உடல் நலம், ஆன்ம நலம் பெற்று வருகின்றனர். “அமைதியின் தூதுவன்” என அழைக்கப்படும் தந்தைக்குப் புனிதர் பட்டம் கிடைத்திட மக்கள் ஜெபித்து வருகின்றனர்.