இறை ஊழியர் அதரியான் கௌசானல், வடக்கன்குளம் பங்குத்தந்தையாக- 1910ல் இருந்து 1919 வரை திருப்பணி செய்தார்கள்.
இறை ஊழியர் அதரியான் கௌசானல் (1850-1930)
இறை ஊழியரான அதரியான் கௌசானல் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியான அவேரோன் மாவட்டத்தில் மசியே என்னும் சிற்றூரில் 1850 செப். 27 அன்று பிறந்த இவரின் பெற்றோருக்கு 9 பிள்ளைகளில் 4 பேர் இறை அழைத்தலைப் பெற்றவர்கள். கௌசானல் இளமையில் பெற்றோரால் குடும்ப ஜெபம், விவிலியம் வாசித்தல், ஆலய வழிபாடுளில் பங்கேற்றல் ஆகியவற்றில் ஈடுபட பழக்கப்படுத்தப்பட்டார். எனவே புனித வாழ்வில் ஆர்வமுடன் திகழ்ந்தார். இவர் 1864-ல் வீல் பிரான்ஷ் என்ற இடத்தில் இயங்கிவந்த ரொடேஸ் மறைமாவட்ட இளங்குரு மடத்தில் இணைந்து, சிறந்த மாணவராகத் திகழ்ந்து, ஆசிரியர்கள், மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
மெய்யியல் படிப்பின்போது பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார். ரொடேஸ் ஆயர் இவரின் திறமைகளைக் கண்டு தம் செயலாளராகவும், நூலகப் பொறுப்பாளராகவும் நியமிக்க முடிவெடுத்தார். ஆனால். கௌசானல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற இயேசுசபையில் மறைபணியாற்ற விரும்பி 1876 டிசம்பர் மாதம் இயேசு சபையில் சேர்ந்தார். ஸ்பெயின் நாட்டில் யுகல்ஸ் நகரில் 1882-1891 வரை இறையியல் பயிற்சி பெற்று 1885ல் குருவாக அருட்பொழிவு பெற்றார்.
மதுரை இயேசு சபயிைல் எண்ணற்ற பிரெஞ்சுக் குருக்கள் பணியாற்றினர். கௌசானல் மதுரையில் இயேசு சபையில் பணியாற்ற விரும்பி 3 வாரங்கள் கப்பல் பயணம் செய்து 1885 நவ 15 புதுச்சேரி வந்து சேர்ந்தார். சில மாதங்கள் திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயேசு சபை இல்லத்தில் தங்கி முறையாகத் தமிழ் பயின்றார். 1889-ல் தூத்துக்குடி தூய இருதயங்களின் ஆலயப் பங்குத்தந்தை லோவன்தூர் நோய்வாய்ப்பட்டதால் பிரான்சுக்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அதரியான் கௌசானல் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.
ஆலய வழிபாடுகளின் புனிதத்தைக் காக்க ஆடம்பரங்களை நிறுத்தி, மக்களை ஆன்மீகத்தாகம் கொள்ள செய்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்தார். மறைப்பணியில் தாகம் கொண்டு ஆலயங்கள் கட்டி மக்களைக் கிறிஸ்துவில் வழிநடத்தினார். எனவே “மறைவளர்த்த மாமனிதர்” என்றழைக்கப்பட்டார்.
1892-ல் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த காணியர்களுக்குத் திருமுழுக்கு அளித்து ஆலயம் கட்டிக்கொடுத்தும், கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் போதித்து கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அவர்களில் பல குடும்பங்கள் வடக்கன்குளத்தில் வாழ்கின்றனர்.
கௌசானல் களிம்பு
கௌசானல் அடிகள், வடக்கன்குளத்தில் பங்குத்தந்தையாய் பணியாற்றியபோது அவரின் ஐரோப்பிய நண்பர் திரு. கார்னியர் எண்ணெய் மூலம் செய்த களிம்பைத் தந்தைக்கு அனுப்பி வைத்தார். அக்களிம்பு தீக்காயம். கொப்பளம், வண்டு, கடி, தலைவலி போன்ற நோய்களைக் குணமாக்கியதால் சிற்றூர்களிலிருந்து மக்கள் வந்து மருத்துவ உதவியை நாடி வந்தனர். தந்தையும் அவரது நண்பரிடம் மருந்தின் செய்முறைகளைக் கற்றுக்கொண்டு தாமே களிம்பு தயாரித்து மக்கள் துன்பங்களைப் போக்கினார். தந்தையிடம் உதவி வேண்டி வருவோரின் காயங்களில் தடவி ஜெபித்து விடுவார். மக்கள் சுகம் பெற்றுச் சென்றனர். அக்களிம்பு ‘கௌசானல் களிம்பு’ என்று அறிமுகமானது. இன்றும் இந்த மருந்தை மக்கள் பயன்படுத்தி நலமடைந்து வருகின்றனர்.
சமூகப் போராளி
1749 முதல் வடக்கன்குளம் பங்குத்தளம், பெரும் குழப்பம் நிறைந்த பங்காக இருந்து வந்தது. அந்தக்கால கட்டத்தில் திருச்சி துணை ஆயர் ஃபெசாத்தியர் ஆலயத்தினுள் பிரச்சனையில் இருந்த சுவரைப் பார்வையிட்டு, அந்தச் சுவரை அகற்றும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி, 1910 நவம்பர் 18 அன்று ஆலயத்தின் சுவர் அகற்றப்பட்டது. மக்கள் பிரச்சனைகள் தீர்ந்து, இறைவனில் வாழவும், கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வேரூன்றவும் பணியாற்றினார். இதனால் நீண்ட காலமாக இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
வடவையைத் தொடர்ந்து கள்ளிகுளம் பங்குத்தந்தையாக 1919-ல் பொறுப்பேற்றார். சில ஆண்டுகள் பணியாற்றிய பின் சேந்தமரம் பங்கில் ஓய்வுக்காக அனுப்பப்பட்டார். பங்குத்தந்தைக்கு உதவியாக ஆன்மீகக் காரியங்களில் இருந்தார். 1925-ல் தனது 50-வது ஆண்டு துறவு வாழ்வின் பொன்விழாவைக் கொண்டாடினர்.
இறை ஊழியர் அதரியான் கௌசானல் 1930-ம் ஆண்டு தமது 80-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இயேசு, சென்ற இடமெல்லாம் நன்மைகள் செய்தது போன்று தந்தையும், மக்கள் பிணிபோக்கும் மருத்துவராக, அறியாமை இருளகற்றும் ஒளிதீபமாக. மெய்யறிவூட்டும் இறைப்பணியாளராக. முற்போக்கு சிந்தனையாளராக, நாடும் ஏடும் போற்றும் வரலாற்று நாயகனாக வாழ்ந்து. இறைவனுக்குத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். பிரான்சு நாட்டில் வாழ்ந்து நம் திரு அவைக்கும், மறைமாவட்டத்திற்கும், நம் பங்குக்கும் நன்மைகள் செய்த தந்தைக்கு திரு. இருதய சபை புனிதர் பட்டத்திற்கான முயற்சிகளைச் செய்து வருகிறது.
வடக்கன்குளத்தில் தென் மண்டலம் சார்பாக 14/8/2024 அன்று மேதகு ஆயர் ஸ்டிபன் அவர்கள் தலைமையில் கௌசானல் விளையாட்டு கழகம் திறந்து வைக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டது.